ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது நேரத்தை சமூக வலைதளங்களில் செலவழித்துவருகின்றனர்.
அந்தவகையில், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான ரஹானே நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவந்தார்.
அதில், ரசிகர் ஒருவர் நீங்கள் விளையாடியதில் உங்களுக்கு பிடித்த இரண்டு இன்னிங்ஸ்கள் எது என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு ரஹானே, ”2014இல் இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் அடித்த சதமும், 2015 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மெல்போர்னில் அடித்த 79 ரன்களும்தான் எனது ஃபேவரைட் இன்னிங்ஸ்கள்” என பதிளித்தார்.
அவர் கூறியதைபோல லார்ட்ஸில் சதம் அடித்தது அவருக்கு மட்டுமல்ல இந்திய கிரிக்கெட்டும் ஸ்பெஷலானதுதான். ஏனெனில், இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தை வீழ்த்தியதில் ரஹானேவின் பங்களிப்பு அளப்பரியது. ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது பந்துவீச்சில் இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்த நிலையில், ரஹானே தனது சிறப்பான ஆட்டத்தால் 154 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார்.
அதேபோல, 2015 உலகக்கோப்பை தொடரில் மெல்போர்னில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரஹானே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடினார். 60 பந்துகளில் அவர் 79 ரன்கள் விளாசி அசத்தியதால் இந்திய அணி அப்போட்டியில் 130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
இதையும் படிங்க: ஜாகிருக்கு ஸ்மித், ஹர்பஜனுக்கு பாண்டிங்... பந்துவீச்சாளர்களது ஃபேவரைட் விக்கெட்டாக இருந்த பேட்ஸ்மேன்கள்
!