இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிக்களுக்கு இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றுவருகிறது. முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். ஐந்து ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் கீமார் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த புஜாராவும் இரண்டு ரன்களில் ரோச்சிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கீமார் ரோச் அதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி 9 ரன்களில் கெப்ரிலிடம் விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தார். 25 ரன்களுக்குள் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவந்த இந்திய அணிக்கு அடுத்து களமிறங்கிய துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே தனது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் கணக்கை உயர்த்தத் தொடங்கினார்.
தொடர்ந்து விளையாடிய ராகுல் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஸ்டன் சேஸிடம் தனது விக்கெட்டை இழந்தார். பின் களமிறங்கிய ஹனுமா விஹாரி, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விஹாரி 32 ரன்களில் ரோச்சிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் ரஹானே அதன்பின் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அரைசதமடித்து அசத்திய ரஹானே, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 84 ரன்களில் கெப்ரிலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் 68.5ஆவது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை நீடித்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 20 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 3 ரன்களுடனும் களத்திலுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கீமார் ரோச் மூன்று விக்கெட்டுகளையும் ஷனான் கெப்ரில் இரண்டு விக்கெட்டுகளையும் ரோஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.