மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இத்தொடரின் முதல் போட்டியில் படுதோல்வியைச் சந்தித்திருந்த போதும், அதிலிருந்து மீண்டு மெல்போர்ன் டெஸ்டில் தனது பதிலடியைக் கொடுத்த இந்திய அணிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிபெற்றது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனது பாராட்டைப் பதிவிட்டுள்ளார். இது குறித்து பேசிய அக்தர், “இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது எப்படி இருக்கிறது என்றால், கோணிச்சாக்கில் ஒரு நபரைக் கட்டிவைத்து அடிப்பதுபோல் இருக்கிறது.
இந்திய அணி தன்னுடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் போட்டியில் மோசமான தோல்வியை எதிர்கொண்டு பல விமர்சனங்களைப் பெற்ற பின்பு, அடுத்த போட்டியில் அபார வெற்றியைப் பெற்று பதிலடி கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
இரண்டாவது போட்டியில் விராட் கோலி, முகமது ஷமி, ரோஹித் சர்மா என மூன்று முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெறாமல் இருந்தும், கேப்டன் அஜிங்கிய ரஹானே சிறப்பாகச் செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது மட்டுமல்லாமல், ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். அவர் களத்தில் அமைதியாக இருந்தாலும், அவர் பெற்றுக்கொடுத்த வெற்றியின் சத்தம் இன்னும் அமைதியடையவில்லை.