வங்கதேச அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்களில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே வங்கதேச தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் அடங்கிய இந்திய டி20 மற்றும் டெஸ்ட் அணியின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில் டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டி20 அணியில் விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரட்டை சதம் விளாசிய சஞ்சு சாம்சனின் பெயர் இடம்பெற்றுள்ளது.
அதேபோன்று இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வில் இருப்பதால் இளம் ஆல்-ரவுண்டரான சிவம் துபேவுக்கு முதன்முறையாக இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. ஜடேஜா விடுவிக்கப்பட்ட நிலையில், ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலககோப்பை தொடருக்குப்பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று தொடர்களையும் கைப்பற்றியது. அதன்பின் சொந்த மண்ணில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை டிரா செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 3-0 என வென்றது.
இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 240 புள்ளிகளுடன் சிம்ம சொப்பனமாக முதலிடத்தில் நீடிக்கிறது. அதே போன்று வங்க தேச அணிக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.