மாடர்ன் டே கிரிக்கெட்டின் ரன்மெஷின் என இந்தியஅணியின் கேப்டன் கோலி அழைக்கப்பட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் கோலி - ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இவர்களில் யார் சிறந்த வீரர் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் நீண்ட நாட்களாக நடந்துக்கொண்டே இருக்கிறது.அதற்கு முக்கிய காரணம், ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்தின் கம்பேக்தான்.
பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கி ஒராண்டுத் தடைக்குப் பிறகு ஆஷஸ் தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஎன்ட்ரி தந்த அவர் 774 ரன்களை குவித்து, டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் கோலியைப் இரண்டாவது இடத்துக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்.இதனால், கடந்த இரண்டரை மாதங்களாக கோலி இரண்டாவது இடத்திலேயே இருந்துவந்தார்.
தற்போது ஆஸ்திரேலியா - பாகிஸ்தான், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்த நிலையில், ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில், கோலி ஸ்டீவ் ஸ்மித்தை முந்திக்கொண்டு 928 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதனால், முதலிடத்திலிருந்த ஸ்டீவ் ஸ்மித் 923 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஸ்டீவ் ஸ்மித் 40 ரன்களை மட்டுமே எடுத்திருந்ததார். அதேசமயம், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோலி சதம் விளாசியிருந்தார். இதனால், கோலி முதலிடத்திலும், ஸ்மித் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ள கோலி தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்வாரா அல்லது ஸ்மித் கோலியை முந்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்பட்டியலில், நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், இந்திய வீரர் புஜாரா ஆகியோர் மூன்றாவது நான்காவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கின்றனர்.
இதையும் படிங்க:சச்சின் பாதையில் கோலி! இருவரையும் இணைத்த ஒரு சாதனை!