இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 59.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை ரோஹித் ஷர்மா 115 ரன்களுடனும் மயாங்க் அகர்வால் 84 ரன்களுடனும் தொடர்ந்தனர்.
இருவரும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கியதால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பின்னர் ரோஹித்-மயாங்க் இணை முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்த நிலையில், ரோஹித் 176 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் உணவு இடைவேளைக்குப்பின் போட்டி தொடர்ந்தபோது புஜாரா 6 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் மயாங்க் அகர்வால் ரன் குவிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
அச்சமயத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தென்னாப்பிரிக்க இடக்கை சுழற்பந்துவீச்சாளர் தமிழன் சீனுராம் முத்துசாமிவீசிய 104ஆவது ஓவரை கோலி எதிர்கொண்டார். அந்த ஓவரின் முதல் பந்தில் ப்ளிக் ஷாட் ஆடிய கோலி சீனுராம் வசமே பிடிபட்டார். இதன்மூலம் சீனுராம் தனது முதல் சர்வதேச விக்கெட்டாக கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சீனுராம் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்தவராவார். தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று தனது சிறப்பான ஆட்டத்தால் தற்போது தேசிய அணியில் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.