இந்திய அணியில் தற்போது கோலி, ரோஹித் சர்மா, தோனி இருந்தாலும், ரெய்னா இல்லையே என்ற வருத்தம் பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு ரெய்னாவை மிஸ் செய்யும் ரசிகர்கள் இங்கு அதிகம். அவரது பிறந்தநாளான இன்று மீண்டு(ம்) வா சின்ன தல...என சமூகவலைதளங்களில் ரெய்னாவின் மறக்க முடியாத நினைவுகளை அவரது ரசிகர்கள் பகிர்ந்துகொண்டுவருகின்றனர். சக வீரர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
இந்திய அணியில் இடதுகை பேட்ஸ்மேனாக நுழைந்த இவர், ஆரம்பக் காலக்கட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் பின் நாட்களில் ஆல்ரவுண்டராகவும் விளங்கினார். ரெய்னா இந்திய அணிக்காக ஏதேனும் ஒரு விதத்தில் தனது பங்களிப்பை வெளிப்படுத்துவார். பேட்டிங்கில் சொதப்பினால், பவுலிங்கில்... அதுவும் இல்லை என்றால் நிச்சயம் ஃபீல்டிங்கில் குறைந்தது 30 ரன்களையாவது தடுத்து நிறுத்துவார். அதுவும் குறிப்பிட்ட இடத்தில்தான் அவர் ஃபீல்டிங் செய்வார் என்று இல்லை, எந்த இடத்தில் இருந்தாலும் அவர் நன்கு ஃபீல்டிங் செய்யக் கூடியவர்.
அதிலும், டைவ் அடித்து கேட்ச் பிடிப்பது, அசால்ட்டாக ரன் அவுட் செய்வதெல்லாமே ரெய்னாவுக்கு கை வந்த கலை. மேற்கூறியதைப் போலவே, ஆரம்பக் காலக்கட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்த அவர், பின்நாட்களில் அணியின் தேவைக்காக லோயர் டவுன் வரிசையில் களமிறங்கி ஹிட்டராக மாறினார். ஆஃப் சைடில் அவர் அடிக்கும் சிக்சர்கள் எல்லாம் ரெய்னா ஃபேன்களின் ஆல் டைம் ஃபெவரைட் ஷாட்ஸ்.
அணியின் தேவைக்காக ஹிட்டராக மாறிய ரெய்னா அதிலும் தனது பங்களிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். 2011 உலகக்கோப்பையில், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான அவரது ஆட்டம் அதற்கு சிறந்த எடுத்தக்காட்டு. ஒருநாள் போட்டிகளில் தனது டாப்-ஆர்டர் இடத்தை விட்டாலும், ரெய்னா டி20 ஸ்பெஷலிஸ்ட்டாகவே கருத்தப்பட்டார். சிஎஸ்கே அணிக்காக மூன்றாவது வரிசையில் களமிறங்கி பல ரன்களை அடித்த அவர், இந்திய அணிக்கான போட்டிகளிலும் மூன்றாவது வரிசையில் களமிறங்கி அதிரடி காட்டினார். சில தொடர்களில் தோனி ஓய்வு பெறும்போதெல்லாம் இவர் கேப்டனாகவும் இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.