இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது.
இரு அணிகளிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் நிறைந்திருந்ததால் இன்றைய ஆட்டத்திலும் அனல் பறந்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர் லிவிஸ் அதிரடியாக ஆட, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சிம்மன்ஸ் 2 ரன்களில் துரதிருஷ்டவசமாக விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் விக்கெட்டை எளிதில் எடுத்தாலும், இரண்டாவது விக்கெட்டை எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் அணி 64 ரன்களை எடுத்துவிட்டது. சிறப்பாக விளையாடிய லிவிஸ் 40 ரன்களில் வெளியேறினார். அடுத்த விக்கெட்டையாவது எளிதில் எடுத்துவிடலாம் என்று எண்ணிய இந்திய அணியை நிலைகுலையச் செய்து நங்கூரமாக நிலைத்து ஆடினார் இளம்வீரர் ஹெட்மைர்.
சிறப்பாக விளையாடிய பிராண்டன் கிங் 31 ரன்களில் வெளியேற, கேப்டன் பொல்லார்டுடன் கைகோர்த்தார் ஹெட்மைர். இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். ஆனால், அடுத்தடுத்து இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் சாஹல். எனினும், ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் கடைசி நேரத்தில் மட்டையை சுழற்றி பந்தை சிதறடித்தார். முடிவில், அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.