வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் ஏற்கனவே இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு முன்பு மழை குறிக்கிட்டத்தால் ஆட்டம் ஒன்பது ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இதைதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக இந்திய அணியில் பூஜா வஸ்ட்ராகரை தவிர வேறுயாரும் இரட்டை இலக்க ரன்களை கூட எடுக்கவில்லை.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி 9 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 50 ரன்களை மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் மேத்யூஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து 50ரன் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆரம்பம் முதலே ரன் எடுக்க தடுமாறியது. இதனால் அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் நான்காவது டி20 போட்டியிலும் இந்திய மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரில் 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை மேத்யூஸ் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ரொனால்டோவின் 99ஆவது கோல்... யூரோவுக்கு என்ட்ரி தரும் போர்ச்சுகல் !