2020ஆம் ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. இதன் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் முன்னேறின.
இதையடுத்து இன்று முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளும் மோதவுள்ளன. இந்த ஆட்டங்கள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் கடும் மழை பெய்துவரும் நிலையில் அரையிறுதிப் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் இன்று 9.30 மணிக்கு தொடங்கவிருந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் மழையின் காரணமாக இதுவரை டாஸ் போடப்படாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடக்கவில்லை என்றால் போட்டிகள் நடத்துவதற்கு மாற்று நாள் அறிவிக்கப்படவில்லை. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஷஃபாலி வர்மா சுட்டித்தனமான வீராங்கனை - ஹர்மன்ப்ரீத் கவுர்