இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் டிசம்பர் 17ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெல்வதற்கு இந்திய அணி வேறு விதமாக சிந்தித்து செயல்படுவது அவசியம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய ஆர்.பி.சிங், ”ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இந்திய அணி கைப்பற்றும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் ஆஸி., அணியுடனான டெஸ்ட் தொடரில் வெல்வது சாதாரண விஷயமல்ல.
ஏனெனில் இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதிலும் ஆஸி., அணியில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் இருப்பது இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தும். இருப்பினும் இந்திய அணி வலிமையாக பேட்டிங் ஆர்டரைக் கொண்டுள்ளதால், இத்தொடர் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல் பும்ரா, ஷமி ஆகியோரது பந்துவீச்சு ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாகச் செயல்படும். இருப்பினும், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டுமென்றால் இந்தத் திறன்கள் போதாது. அதற்கு நாம் வேறு விதமாகதான் சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஆகவே இந்திய பந்துவீச்சாளர்கள் மைதானத்தின் சூழலிற்கு ஏற்ப பந்துவீச கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு விளையாடுவது போல், ஆஸ்திரேலியாவில் செயல்பட முடியாது. அதற்கு மாறாக நீங்கள் எப்படி பந்துவீச வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:“ஸ்மித்தை வீழ்த்த புது யுக்தியைக் கையாள வேண்டும்” - சச்சின் டெண்டுல்கர்