23 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றுவருகிறது. இதில், வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஓமன் உள்ளிட்ட எட்டு அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றன.
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, சவர் நகரில் இன்று நடைபெற்ற தனது கடைசி லீக் போட்டியில் ஹாங்காங் அணியுடன் மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 322 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சின்மை சுதர் 104, சரத் 90 ரன்கள் அடித்தனர்.
இதைத்தொடர்ந்து, 323 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஹாங் காங் அணி 47.3 ஓவர்களிலேயே 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் ஷுபம் சர்மா நான்கு, சித்தார்த் தேசாய், சிவம் மபி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சதம் விளாசிய சின்மை சுதர் இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதேபோல், குரூப் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இந்த நிலையில், நாளை மறுநாள் (நவம்பர் 20) நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதைத்தொடர்ந்து, நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.