உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடிவருகிறது. இதில் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது. ஆடுகளம் ஈரப்பதத்துடன் இருந்ததால் இப்போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் ஆட பணித்தார். போட்டி தொடங்க காலதாமதம் ஆனதால் இப்போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஒன்பது ரன்களை எடுத்திருந்தபோது மழை பெய்ததால் போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் களத்திற்கு திரும்பியபோது வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் மட்டும் அதிரடியாக ஆடினார். அச்சமயத்தில் 31 பந்தில் வெறும் நான்கு ரன்களை மட்டுமே எடுத்திருந்த அதிரடி மன்னன் கெயில், குல்தீப் பந்தில் க்ளீன் போல்டாகி அவுட்டாகினார்.
அதன்பின் மீண்டும் மழைக் குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. எவின் லீவிஸ் 40 ரன்கள் (36 பந்துகள், 2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), ஷாய் ஹோப் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அதன்பின் தொடர்ந்து மழைநீடித்ததாலும் மைதானத்தில் ஈரப்பதம் அதிகரித்ததாலும், போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று டிரின்னிடாட் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.