இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி, இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் கே.எல். ராகுல் 11 ரன்களிலும், ரோஹித் சர்மா 15 ரன்களுடனும் வெளியேறினர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷிவம் தூபே அதிரடியாக விளையாடி, அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தூபே 27 பந்துகளில் தனது முதலாவது சர்வதேச டி20 அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
அரை சதமடித்த மகிழ்ச்சியில் ஷிவம் தூபே அதன்பின் 54 ரன்கள் எடுத்திருந்த தூபே, வால்ஷ் பந்து வீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் 19 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிவம் தூபே 54 ரன்களை எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் வில்லியம்ஸ், வால்ஷ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் தற்போது 171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: மீண்டும் இங்கிலாந்து அணிக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நட்சத்திரங்கள்!