இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று (டிச.6) நடக்கிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் உள்ளிட்டோரும் பந்துவீச்சில் தீபக் சாஹர், புவனேஷ்வர்குமார், ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் வலு சேர்க்கிறார்கள். அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடம் பெற்றாலும் தொடக்க ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா இன்னும் ஒரு சிக்சர் அடித்தால், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்சர் அடித்த முதல் இந்தியர் என்ற மைல்கல்லை எட்டுவார்.
கோப்பையுடன் இருநாட்டு கேப்டன்கள் இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் எட்டில் இந்தியாவும், ஐந்தில் வெஸ்ட் இண்டீசும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
ஹைதராபாத் மைதானத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். ஐபிஎல்லில் இங்கு நடந்த ஆட்டங்களின்போது மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக ஒத்துழைத்ததை பார்க்க முடிந்தது. இந்த முறையும் பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக மும்பையில் நடைபெறவிருந்த இந்த ஆட்டம் ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வெற்றியுடன் கணக்கை தொடங்குமா இந்தியா?