இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் நடைபெறவிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டி குறித்து சிறு பார்வை.
ரோஹித்தின் அதிரடி சதம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே இந்தூர் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் ரோஹித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களால் மறக்க முடியாது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்றுகொண்ட ரோஹித் சர்மா தனது அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 35 பந்துகளில் சதம் விளாசினார். இதன்மூலம், டி20 போட்டிகளில் வேகமாக சதம் அடித்த தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரின் சாதனையை சமன்செய்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 43 பந்துகள் 12 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் என 118 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில், கே.எல். ராகுல் 49 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், எட்டு சிக்சர்கள் என 89 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து 260 ரன்களைக் குவித்தது. டி20 போட்டிகளில் இந்திய அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை அணி 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.