INDvsRSA: இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. இதன் முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், கடைசிப் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்றுவருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா, ரஹானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்திருந்தார்.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 4 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 9 ரன்கள் எடுத்திருந்தபோது, இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து தொடர்ந்த மூன்றாம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஜுபைர் ஹம்சா, பவுமா இணை அணியினர் ரன் கணக்கை உயர்த்தத் தொடங்கினர்.