நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. 30 வருடங்களுக்குப் பிறகு கோலி தலைமையில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகியுள்ளது. இத்தனை நாள்களாக இந்திய அணிக்குள் இருந்த மிடில் ஆர்சர் பிரச்னை இந்தத் தொடரில் சரி செய்யப்பட்டும் தொடரை இழந்துள்ளது இந்திய அணி. இதற்கு மிக முக்கியக் காரணம் இந்திய அணியின் மேட்ச் வின்னர்களான கோலி, பும்ரா ஆகியோர் சரியாக செயல்படாதது என அனைத்துத் தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கோலிக்கு ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ளும் பிரச்னை மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டேவருகிறது. மறுபக்கம் வேகப்பந்துவீச்சில் பவுன்சர், யார்க்கர், இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ஸ்லோ - பால் என அனைத்து விதமான பந்துகளையும் துல்லியமாக வீசும் பும்ரா மூன்று போட்டிகளில் ஆடி ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாதது இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.