நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஏனெனில் இந்திய வீரர்கள் பிரித்வி ஷா 16, புஜாரா 11, கோலி 2 என வரிசையாக நடையைக் கட்டியதால் 40 ரன்களுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த மயாங்க் அகர்வால் - ரகானே ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியனர். இதனால் இந்திய அணி உணவு இடைவேளை வரை மூன்று விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை எடுத்திருந்தது.
பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது மயாங்க் அகர்வால்(34) போல்ட் பந்தில் ஜேமிசன் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் 7 ரன்னில் வெளியேறியதால் இந்திய அணி மீண்டும் தடுமாறத் தொடங்கியது.
பின்னர் ரகானேவுடன் சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பந்த் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை நிற்காததையடுத்து முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தத. ரகானே 38 ரன்களுடனும் (112 பந்துகள், 4 பவுண்டரிகள்), பந்த் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து பந்துவீச்சில் கைல் ஜேமிசன் மூன்று விக்கெட்டுகளையும், சவுத்தீ, போல்ட் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இன்றைய ஆட்டத்தில் அறிமுகமான 6 அடி 8 அங்குள்ள உயர நியூசி.பவுலர் கைல் ஜேமிசன் புஜாரா, கோலி என இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு சரிவை ஏற்படுத்தினார். எனவே, நாளைய போட்டியில் ரகானே, பந்த் ஆகிய இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.