இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இன்று (பிப்.24) தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் (மொடீரா) நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். முன்னதாக இன்றைய போட்டி நடைபெறும் மொடீரா கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்து, அம்மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சூட்டினார்.
மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இஷாந்த் சர்மா இடம்பெற்றுள்ளதையடுத்து, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100ஆவது போட்டியை விளையாடுகிறார். இந்தியா சார்பில் 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். கடந்த போட்டியில் விளையாடிய முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.