அகமதாபாத்:இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (மார்ச் 16) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் இணை களமிறங்கியது. இப்போட்டியிலும் கே.எல். ராகுல் வழக்கம்போல் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அதன்பின் ரோஹித் சர்மா 15 ரன்களிலும், இஷான் கிஷான் 4 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி - ரிஷப் பந்த் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தது. ரிஷப் பந்த் 25 ரன்களை எடுத்திருந்தநிலையில், தேவையில்லாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதையடுத்து, களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒருபுறம் தடுப்பாட்டத்தில் ஈடுபட, மறுமுனையில் ரன் குவிக்க முயற்சித்த விராட் கோலிக்கு பந்து பேட்டில் சிக்காமல் நழுவிக் கொண்டிருந்தது. இதனால் 15 ஓவர்களில் இந்திய அணி 87 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 27ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ஹர்திக் பாண்டியாவும் தனது பங்கிற்கு ஒருசில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 77 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் ஜோர்டன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையும் படிங்க:டூட்டி சந்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்ற தமிழச்சி!