சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 329 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி, அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து 195 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு, ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்து இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினார்.
இதன்மூலம் இரண்டாவது இன்னிங்ஸின் இந்திய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்காக 483 ரன்களை நிர்ணயித்தது.
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து இன்று (பிப். 16) நான்காம் நாள் ஆட்டத்தில் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி அஸ்வின், அக்சர் பட்டேலின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டும் தனி ஒருவனாக களத்தில் நின்று அணியை தோல்வியிலிருந்து மீட்கப் போராடிவருகிறார். நான்காம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டும் எடுத்துள்ளது.
அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இப்போட்டியில் இன்னும் 3 விக்கெட்டுகளை இந்திய அணி கைப்பற்றினால் வெற்றிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மைக்கேல் வாகனுக்கு பதிலடி கொடுத்த அக்சர் பட்டேல்!