இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.13) சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்டமான இன்று (பிப்.14) காலை முதல் செஷனில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸை 329 ரன்களுக்கு முடித்தது.
இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா 161 ரன்களையும், அஜிங்கியா ரஹானே 67 ரன்களையும், ரிஷப் பந்த் 58 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் மோயீன் அலி 4 விக்கெட்டுகளையும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸ் - டோமினிக் சிப்லி இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இன்னிங்ஸின் முதலாவது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா, மூன்றாவது பந்திலேயே ரோரி பர்ன்ஸை வெளியேற்றி அசத்தினார்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான டோமினிக் சிப்லி 16 ரன்களில் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த கேப்டன் ஜோ ரூட், இந்த இன்னிங்ஸில் 9 ரன்கள் எடுத்திருந்தபோது அக்சர் பட்டேல் பந்துவீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார்.