சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(பிப்.14) தொடங்கியது.
இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸை நிறைவு செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியினர், அஸ்வின், அக்சர் பட்டேல் ஆகியோரது அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதில் ரோரி பர்ன், டேனில் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த ஒல்லி போப் - ஃபோக்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை பாலோஆனிலிருந்து மீட்கப் போரடினர்.
இதில் ஒல்லி போப் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்த இன்னிங்ஸில் முகமது சிராஜ் வீசிய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த மோயீன் அலியும்; 6 ரன்களோடு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய ஒல்லி ஸ்டோன் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார்.
இதனால் இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
மேலும் 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ள இங்கிலாந்து அணி, இன்றைய நாள் அட்டத்தின் மூன்றாவது செஷனில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே பாலோஆனைத் தவிர்க்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் தடுமாறிவருகிறது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: கடைசி நிமிடத்தில் சென்னையின் வெற்றியைப் பறித்த இஷான் பண்டிதா!