இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதசே அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடர்களில் விளையாடுகிறது. இதில் தற்போது நடைபெற்றுவரும் டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. இந்தத் தொடருக்கான வங்கதேச அணியில் தமிம் இக்பால், ஷகிப்-அல்-ஹசன் இல்லை என்றாலும் அந்த அணி மிரட்டலான ஆட்டத்தையே வெளிப்படுத்திவருகிறது.
முதல் டி20- போட்டியில் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச வீரர் ரஹிம் டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி சிறப்பான பவுலிங், பேட்டிங் ஆகியவற்றால் இந்திய அணியை வீழ்த்தியது. குறிப்பாக, முஷ்பிகுர் ரஹிமின் பேட்டிங் அந்த அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தது. இந்திய அணி இப்போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் சொதப்பியதால்தான் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து, ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணியின் ஃபீல்டிங் சற்று மோசமாகவே இருந்தது. ஏராளமான ஓவர் த்ரோவால் கூடுதல் ரன்களை இந்திய அணி வங்கதேச அணிக்கு வழங்கியது. இருப்பினும், ரோஹித் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் அசால்ட்டாக வென்றது.
இரண்டாவது டி20 போட்டியில் 85 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மா இன்று நாக்பூரில் இன்னும் சில மணி நேரத்தில் நடைபெறும் கடைசி டி20 போட்டியில் வெற்றிபெற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இரு நாட்டு ரசிகர்களுக்கும் எழுந்துள்ளது. இதனிடையே, இந்திய அணியின் அனுபவமில்லாத பவுலிங்கை அட்டாக் செய்வோம் என வங்கதேச அணியின் பயிற்சியாளர் ரசல் டோமிங்கோ தெரிவித்திருந்தார். அவர் கூறியதைப் போலவே இந்திய அணியின் பந்துவீச்சு அனுபவம் இல்லாமல்தான் இருக்கிறது.
குறிப்பாக, கலீல் அஹமதின் பந்துவீச்சை வங்கதேச வீரர்கள் எளிதாக எதிர்கொள்கின்றனர். இரண்டு போட்டியிலும் விளையாடிய அவர் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து 81 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதனால், இன்றைய போட்டியில் கலீல் அஹமது இந்திய அணியில் சேர்க்கப்படுவாரா என்பது சந்தேகம்தான்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்றையப் போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லுமா அல்லது மஹமதுல்லாஹ் தலைமையிலான வங்கதேச அணி வெற்றிபெற்று வரலாற்றைப் படைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஸ்டோர் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிப்பரப்பாகிறது.