இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று தொடங்கிய முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இதில் 9 ரன்கள் அடித்திருந்த நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அதன்பின் களமிறங்கிய கே.எல். ராகுல் 15 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் தவான் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். அதன்பின் 41 ரன்கள் அடித்திருந்த நிலையில் தவானும் ஆட்டமிழக்க இந்திய அணி 95 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் இறுதியில் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார்.
இதன் மூலம் இருபது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களுடனும், பாண்டியா 15 ரன்களுடனும் களத்திலிருந்தனர். வங்கதேச அணி சார்பில் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்பின் தற்போது 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்து வருகிறது. இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிராக ஆடிய எந்தவொரு டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், சாதனைப் படைத்த ரோஹித்!