பார்டர் கவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், 242 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
இதில் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹானே எதிர்பாரத விதமான போல்டாக, அவருக்கு அடுத்து வந்த ஹனுமா விஹாரியும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த புஜாரா அரைசதம் அடித்தக் கையோடு ஆட்டமிழந்து பெவிலியனுக்குச் சென்றார். அதன்பின் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 94 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - வில் புகோவ்ஸ்கி களமிறங்கினர். இதில் புகோவ்ஸ்கி 10 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னரும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுசாக்னே - ஸ்டீவ் ஸ்மித் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினர். இதன் மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 29 ரன்களுடனும், மார்னஸ் லபுசாக்னே 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் 197 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தைத் நாளை (ஜன.10) தொடரவுள்ளது.
இதையும் படிங்க: IND vs AUS: போட்டி நடுவரிடம் ஆவேசமடைந்த டிம் பெய்ன்!