இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்னில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆனால் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி பும்ரா, அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் 72.3 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுசாக்னே 48 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தது. தொடக்க ஆட்டகாரான மயாங்க் அகர்வால் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை எடுத்திருந்தது.