இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஏழு டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் மகளிர்களுக்கான உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில், இந்த டி20 தொடர் இரு அணிகளுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ் டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதால் அவருக்கு பதிலாக 15 வயது இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையே சூரத் நகரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தீப்தி ஷர்மாவின் அசத்தலான பந்துவீச்சினால் இந்திய மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று சூரத் நகரில் நடைபெறவிருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்தில், பெய்யத் தொடங்கிய மழை நிக்காததால், ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால், மைதானத்துக்கு வருகைத் தந்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்ததால், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்திய வீராங்கனைகள் மைதானத்தை சுற்றி வந்த நன்றி தெரிவித்தனர்.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான அனைத்து டி20 போட்டிகளிலும் சூரத்தில்தான் நடைபெறுகிறது. இதனால், இனிவரும் போட்டிகள் மழையால் கைவிடப்படுமா அல்லது நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ளது.