19 வயதுக்குள்பட்ட இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கிழக்கு லண்டனில் நடைபெற்றது.
119 ரன்களுக்கு ஆல்-அவுட்
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 29.5 ஓவர்களில் 119 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜோனதன் பேர்டு 25, ஆண்ட்ரூவ் லூவ் (Andrew Louw) 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நான்கு விக்கெட்டுகளும் அகாஷ் சிங், அதர்வா அங்கோலேக்கர், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஆரம்பமே படுமோசம்
இதைத்தொடர்ந்து, 120 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே படுமோசமாக அமைந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ப்ரியம் கார்க் ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த சஷ்வத் ரவாத் இரண்டு ரன்களில் நடையைக் கட்ட இந்திய அணி 6.1 ஓவர்களில் 26 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.