கிரிக்கெட்டில் 1980,90 காலக்கட்டங்களில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் பெரும்பாலோனார் தற்போது 50 வயதை நிச்சயம் கடந்திருப்பார்கள். அவர்களது ஆட்டத்தை ரசிகர்கள் ஹைலைட்ஸைத் தவிர நேரில் மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. 50 வயது கடந்தவர்களுக்கான இரண்டாவது உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் மார்ச் 10 முதல் 24ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், நபிமியா, ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகள் முதல்முறையாக பங்கேற்கவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், இந்திய அணி, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நமிபியா, வெல்ஸ் அணிகளுடன் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை மற்றும் இரண்டு அணிகள் உள்ளன.
மார்ச் 11ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டி மூலம், இந்திய அணி தனது முதல் போட்டியில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக பிரபல தொழில் நிறுவனர் சைலேந்திரா சிங் நியக்கப்பட்டுள்ளார்.