இந்திய கிரிக்கெட் அணி 2020 ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தடை விதித்தது. இதனால் இந்திய அணிக்கு எதிரான ஜிம்பாப்வே தொடர் நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பிசிசிஐ ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2020 ஜனவரி மாதம் நடைபெறவிருந்த ஜிம்பாப்வே தொடருக்கு பதிலாக இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் என்பதே அந்த அறிவிப்பு.
அடுத்தாண்டு ஜனவரி ஐந்தாம் தேதி தொடங்கும் டி20 தொடரின் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி பாரஸ்ப்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஏழாம் தேதி இந்தூரிலும், பத்தாம் தேதி புனேவிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகள் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.