மகளிர் அணிகளுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், ஏற்கனவே ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய எட்டு அணிகள் நேரடியாக தகுதிப்பெற்று இருந்தன.
இந்நிலையில் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம், தாய்லாந்து, வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளும் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளன.
இந்நிலையில் இந்தத் தொடருக்கான அட்டவனையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் அணிகள் இடம்பிடித்துள்ளன.
அதேபோல் குரூப் பி பிரிவில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இத்தொடரில் இரு பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.
இறுதியாக, 2016ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்தது.
டி20போட்டியில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜ் ஓய்வு பெற்றார். இதனால், இந்தத் தொடரில் அவரது வெற்றிடத்தை எந்த இளம் வீராங்கனை நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணியின் அட்டவனை:
- பிப்ரவரி 21, இந்தியா v ஆஸ்திரேலியா (சிட்னி)
- பிப்ரவரி 24, இந்தியா v வங்கதேசம் (பெர்த்)
- பிப்ரவரி 27, இந்தியா v நியூசிலாந்து (மெல்போர்ன்)
- பிப்ரவரி 29, இந்தியா v இலங்கை (மெல்போர்ன்)