உலகக்கோப்பை தொடருக்குப் பின், இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டி கயானாவில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் மேல்வரிசை வீரர்கள் வழக்கம்போல் சொதப்பினர். சுனில் நரைன் 2, எவின் லீவிஸ் 10, ஷிம்ரான் ஹெட்மயர் 1 ரன்னில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 14 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இறங்கிய பொல்லார்டு அவ்வபோது சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 58 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் பிராத்வெய்ட் 10 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் பொல்லார்டு இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய பவ்வல் 32 ரன்களுடனும், பேபியன் ஆலன் 8 ரன்னுடனும், ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா சார்பில் தீபக் சாஹர் 3, நவ்தீப் சைனி 2, ராகுல் சாஹர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யும் தீபக் சாஹர் பின்னர் இந்திய அணி துரத்தலை தொடங்கியபோது, இரண்டாவது ஓவரிலேயே ஷிகர் தவான் 3 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த ராகுலும் 20 ரன்னில் வெளியேற, இந்திய அணி 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதன்பின் கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடத் தொடங்கினார். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு அவ்வபோது பவுண்டரிகள் விளாசினர்.
அப்போது 37 பந்தில் அரைசதத்தை நிறைவு செய்த விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் தனது 21ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின் கோலி 59 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் தனது இரண்டாவது அரைசதத்தை நிறைவு செய்தார். இறுதியில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தில் ரிஷப் பண்ட் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச்செய்தார்.
இதனால் இந்திய அணி 19.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 150 ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. பண்ட் 65 ரன்னுடனும், மனீஷ் பாண்டே 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஒயிட் வாஷ் செய்துள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.