இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 502 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணி சார்பில் மயங்க் அகர்வால் 215 ரன்களையும், ரோகித் சர்மா 176 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே அஸ்வின் பந்துவீச்சில் தடுமாறியது. இதன் மூலம் அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 111 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து 71 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதமடித்து அசத்திய மயங்க் அகார்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மறுமுனையில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா எதிரணி பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். சிறப்பாக விளையாடிய அவர் 10 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என 127 ரன்களை விளாசித் தள்ளினார்.
அவருடன் இனைந்து தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவும் தனது பங்கிற்கு 13 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 81 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜடேஜா, கோலி இணை அதிரடி காட்டியது. இதில் ஜடேஜா 32 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 40 ரன்களை வெளுத்து வாங்கினார். இதன் மூலம் இந்திய அணி கடைசியாக எதிர்கொண்ட 10 ஓவர்களில் 94 ரன்களைக் குவித்தது.