இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயரின் சதத்தால் 347 ரன்களை குவித்தது.பின்னர், 348 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ராஸ் டெய்லரின் சதத்தாலும், டாம் லதாம், ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோரது அரை சதத்தாலும் 49ஆவது ஓவரில் ஆறு விக்கெட்டை இழந்து 348 ரன்களை எட்டி வெற்றிபெற்றது.
இதனால், நியூசிலாந்து அணி இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்தth தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனிடையே இன்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட இந்திய அணி நான்கு ஓவர்கள் தாமதமாக பந்துவீசியது தெரியவந்தது. இதனால், ஐசிசியின் விதிமுறைப்படி ஒரு ஓவருக்கு 20 சதவீத அபராதம் என்ற கணக்கின்படி, இந்திய வீரர்கள் அனைவருக்கும் இன்றைய ஆட்டத்தின் ஊதியத்திலிருந்து 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தவறை இந்திய அணியின் கேப்டன் கோலி ஒப்புக்கொண்டு அபராதத்தை ஏற்றுகொண்டதால் அவரிடம் ஐசிசி இது குறித்து உரிய விசாரணை நடத்தவில்லை. முன்னதாக, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது, ஐந்தாவது டி20 போட்டியில் இதேபோன்ற செயலில் ஈடுபட்டதால் ஐசிசி இந்திய வீரர்களுக்கு 40 சதவீதம் மற்றும் 20 சதவீதம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தாதாவின் சாதனையை முறியடித்த கோலி!