சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பதவியேற்றார். இதையடுத்து இந்திய தேர்வுக்குழு உறுப்பினர்கள், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து கங்குலி பேசுகையில், பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆதரவளித்ததாக கூறினார்.
வங்கதேச அணி அடுத்த மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில் டி20 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பின்னர் நடைபெறும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தை பகல் - இரவு போட்டியாக நடத்த வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
தேர்வுக்குழுவுடன் பிசிசிஐ தலைவர் ஆலோசனை செய்தபோது... இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் நிர்வாகி நிஸாமுதீன் சவுத்ரி பேசுகையில், ''இந்த விஷயத்தில் அணி நிர்வாகத்திடமும், வீரர்களிடமும் ஆலோசனை கேட்டுள்ளோம். ஏனென்றால் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடவேண்டும் என்றால், பிங்க் நிற பந்தில் விளையாட போதுமான பயிற்சியும், அனுபவமும் தேவை. இந்த விஷயத்தில் ஓரிரு நாட்களில் எங்கள் முடிவை தெரிவிப்போம்'' என்றார்.
கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் - இரவு போட்டியாக நடத்தப்பட்டால், இந்திய அணி பங்கேற்கும் முதல் பகல் - இரவு டெஸ்ட் போட்டியாக அந்த போட்டி அமையும். கிரிக்கெட்டில் பரிசோதனை முயற்சியாக பகல் - இரவு டெஸ்ட் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலிறுதியுடன் திரும்பிய உலக சாம்பியன்!