தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2021, 9:00 AM IST

ETV Bharat / sports

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாலைப் பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

India legends to face West Indies legeds in Road safety world series finals
India legends to face West Indies legeds in Road safety world series finals

சாலைப் பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (மார்ச்.18) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி, வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர்-வீரேந்திர சேவாக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய வீரேந்திர சேவாக், 17 பந்துகளில் 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சின் டெண்டுல்கர், அரைசதம் கடந்தார். பின்னர் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சச்சினும் ஆட்டமிழந்த பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த யூசுப் பதான் - யுவராஜ் சிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

அதிலும் யுவராஜ் சிங், ஒரே ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்களைப் பறக்கவிட்டு பந்துவீச்சாளரை நிலைகுலையச் செய்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யுவராஜ் சிங் 20 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் என 49 ரன்களையும், யூசுப் பதான் 37 ரன்களையும் குவித்திருந்தனர்.

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் டுவைன் பிராவோ, நர்சிங் தியோனரின் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.

பின்னர் 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டுவைன் பிராவோ ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் தியோனரினுடன் ஜோடி சேர்ந்த பிரையன் லாரா தனது பங்கிற்கு பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

கடைசி இரண்டு ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணி வெற்றிபெற 25 ரன்கள் தேவை என்ற நிலையில், லாரா - தியோனரின் இணை விளையாடியது. பிறகு 46 ரன்கள் எடுத்திருந்த பிரையன் லாரா, வினாய் குமார் பந்து வீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் வெற்றி இலக்கை எட்டத்தவறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 12 ரன்கள வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதையும் படிங்க:ஆல் இங்கிலாந்து ஓபன்: இந்தியர்களுக்கு கரோனா நெகட்டிவ்!

ABOUT THE AUTHOR

...view details