ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இருநாட்டு டெஸ்ட் வீரர்களும் நாளை (டிச.06) முதல் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி குறித்தும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்தும் ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய ஹெட், “கடந்த முறை ஆஸ்திரேலிய - இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரிலிருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் இம்முறை உள்ள இந்திய அணியில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் பந்துவீச்சை சமாளிப்பது மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும்.
அதிலும் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரது பந்துவீச்சுகளை எதிர்கொள்ள நாங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் அவர்களின் பந்துவீச்சின்போது எதிர்பாராத பவுன்சர்கள், யார்க்கர்கள் இருக்கும்.
மேலும் பயிற்சி ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியா ஏ அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த இந்த வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்தி, எனது கேப்டன்சி திறனை வளர்த்துகொள்வேன் என நினைக்கிறேன். இதனால் பயிற்சிப் போட்டியில் விளையாடுவதற்காக நான் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான மூன்று நாள் பயிற்சி ஆட்டம் நாளை முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை சிட்னியில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: நியூசிலாந்து ‘டூ’ அமெரிக்கா: சர்வதேச வீரர்களுக்கு வலை விரிக்கும் அமெரிக்கா!