சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என அன்போடு அழைக்கப்படுபவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். இவர் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி பல்வேறு கருத்துகளை பகிர்ந்துவருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய வீடியோவில் ஐபிஎல் தொடர், கொரோனா வைரஸ், இந்தியா - பாகிஸ்தான் உறவு ஆகியவைப் பற்றி பேசினார்.
அதில், '' இந்தியா ஒரு சிறந்த நாடு. அங்குள்ள மக்கள் அனைவருமே ஆச்சரியமானவர்கள். இந்தியாவிலிருக்கும் எந்த மக்களும் பாகிஸ்தானுடனான விரோதப் போக்கையோ, போரையோ விரும்பமாட்டார்கள். ஆனால் இந்தியாவில் டிவியை ஆன் செய்தால், நாளையே இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் வருவது போன்ற சூழல் உள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் செய்துள்ளேன். தொடர்ந்து இந்தியாவை கண்கானித்து வருகிறேன். இப்போது இந்தியா, பாகிஸ்தானோடு வேலை செய்வதற்கு காத்திருக்கிறது. இந்தியாவின் முன்னேற்றம், பாகிஸ்தானையும் முன்நடத்தி செல்லும்.
இதுவரை இந்தியாவில் 110 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளைவிடவும் கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. நிச்சயம் கொரோனா வைரஸிலிருந்து அனைவரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்.
சீனாவில் வாழும் மக்கள் ஏன் நாய், பூனை, வவ்வால் என அனைத்தையும் சாப்பிடுகிறார்கள் என தெரியவில்லை. அவர்களின் உணவு பழக்கத்தால் மட்டுமே உலகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் செயல்களால் சுற்றுலாத்துறை, பொருளாதாரம் என அனைத்தும் முடங்கியுள்ளது. சீன மக்களுக்கு எதிராக நான் பேசவில்லை. அவர்களின் உணவு கலாசாரத்தால் இப்போது உலகமே திண்டாடிவருகிறது.
நீண்ட நாள்களுக்கு பிறகு பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இல்லாமல் பிஎஸ்எல் தொடர் நடப்பதால் அதிகமான வெளிநாட்டு வீரர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்கள். கொரோனா வைரஸால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க:அந்த பயம் இன்னும் அப்படியே இருக்கிறது! #Akhtar