இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான பகலிரவு பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் (டிச.11) சிட்னியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனோடு முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.
இதைத்தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் ஆகியோரின் சதத்தால், ஆட்டநேர முடிவில் 386 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் ஹனுமா விஹாரி 104 ரன்களுடனும், ரிஷப் பந்த் 103 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியின் தொடக்க வீரர்கள் மார்கஸ் ஹாரிஸ், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் முகமது ஷமியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்த நிக் மேடிசனும் 14 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.