இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்காண மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால், கரோனா வைரஸ் எதிர்ப்புக்கு நிதி திரட்டும் விதமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில், எங்களுக்கு பணம் முக்கியமில்லை என அக்தரின் கருத்துக்கு இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "அக்தர் அவரது யோசனையை கூறியுள்ளார். ஆனால், எங்களுக்கு கிரிக்கெட் தொடரை நடத்திதான் நிதி திரட்ட வேண்டும் என்று இல்லை. எங்களிடம் போதுமான பணம் உள்ளது. ஏற்கனவே இந்திய கிரிக்கெட் வாரியமும் ரூ. 51 கோடி நிதியுதவி அளித்துள்ளது. ஒருவேளை இன்னும் அதிகமாக பணம் தேவைப்பட்டாலும் பிசிசிஐ வழங்கும்.
தற்போதைய சூழல் எப்போது சரியாகும் என்று யாராலும் உறுதியளிக்க முடியாது. இந்தத் தருணத்தில் கிரிக்கெட் தொடரை நடத்தினால் அது நம் வீரர்களை நாமே ஆபத்தில் தள்ளிவிடும் செயலாக மாறிவிடும். அதனால் இது நமக்கு தேவையில்லை.
அப்படியே இந்தத் தொடர் நடந்தாலும், மூன்று போட்டிகளில் எவ்வளவு பணம் நம்மால் ஈட்ட முடியும். இந்த நிலைமை சரியான பிறகு கிரிக்கெட் போட்டிகள் வழக்கம்போல் நடைபெறலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகள் பற்றி நாம் யோசித்துக்கூட பார்க்க முடியாது.
இந்த இக்கட்டான சூழலில் கிரிக்கெட்டைவிட நாடுதான் முக்கியம். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதிலும், இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பாடுபடும் மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோரது உடல்நலத்தில் அக்கறை கொள்வதிலும்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:2011 உலகக்கோப்பையை வென்ற பிறகு சச்சினின் நடனம்... நெகிழும் ஹர்பஜன்