இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கேதச அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நேற்று முன்தினம் (நவம்பர் 14) தொடங்கியது.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷமி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி மூன்று, இஷாந்த் சர்மா உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில் மயங்க் அகர்வாலின் உதவியால் 114 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 493 ரன்கள் எடுத்தபோது இரண்டாம் ஆட்டநாள் முடிவுக்கு வந்தது. ஜடேஜா 60 ரன்களுடனும் உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இப்போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த மயங்க் அகர்வால் 243 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இன்று தொடங்கிய இப்போட்டியின் மூன்றாம் ஆட்டநாளில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளர் செய்ததாக அறிவித்தது. இதனால், வங்கதேச அணி 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை விளையாட தொடங்கியது. முதல் இன்னிங்ஸ் போல வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் அந்த அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் பொறுப்புடன் பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். 150 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் என 65 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வினின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இறுதியில், வங்கதேச அணி 69.2 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணி சார்பில் முகமது ஷமி நான்கு, அஸ்வின் மூன்று, உமேஷ் யாதவ் இரண்டு, இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை ருசித்துள்ளது. முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றிருந்தது. இதுமட்டுமின்றி, இந்த ஆண்டில் இந்திய அணி தொடர்ந்து ஆறு டெஸ்ட் போட்டிகளில் அபார வெற்றிபெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கொல்கத்தாவில் பகல்-இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.