தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியா 347 ரன்களில் டிக்ளர்! மீண்டும் மோசமான தொடக்கம் தந்த வங்கதேசம்! - Kohli 136 runs against Bangladesh

வங்கேதச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் எடுத்தபோது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது.

INDvBAN

By

Published : Nov 23, 2019, 5:32 PM IST

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஈடன் கார்டன் கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக (பிங்க் பால்) நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானதையடுத்து, இந்திய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேப்டன் கோலி 59 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 23 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.

இன்று தொடங்கி நடைபெற்றுவரும் இப்போட்டியின் இரண்டாம் ஆட்டநாளில் அசத்தலாக பேட்டிங் செய்த ரஹானே 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில், சிறப்பாக பேட்டிங் செய்த கோலி டெஸ்ட் போட்டியில் தனது 27ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

சதம் அடித்த மகிழ்ச்சியில் கோலி

அவர் 136 ரன்கள் எடுத்தபோது, எபதாத் ஹுசைன் வீசிய பந்தை ஃபிளிக் ஷாட் அடித்தார். அப்போது ஃபைன் லெக் திசையில் ஃபீல்டிங் செய்திருந்த தைஜூல் இஸ்லாம் டைவ் அடித்து கேட்ச் பிடித்ததால் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 308 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. கோலி அவுட்டானதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் (9), உமேஷ் யாதவ் (0), இஷாந்த் ஷர்மா (0) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி 89.4 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் எடுத்த நிலையில், தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. சாஹா 17 ரன்களுடனும், முகமது ஷமி 10 ரன்களுடனும் ஆட்டமிழக்கமால் களத்திலிருந்தனர். வங்கதேச அணி தரப்பில் அல்-அமின் ஹோசைன், எபதாத் ஹோசைன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தற்போது 241 ரன்கள் பின்தங்கிய நிலையில், வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஷத்மன் இஸ்லாம் ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதனால், வங்கதேச அணி முதல் ஓவர் முடிவில் ரன் ஏதுவுமின்றி ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details