தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

யு 19 உலகக் கோப்பை: வெற்றியுடன் கணக்கை தொடங்கிய நடப்பு சாம்பியன் இந்தியா! - யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங்

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

#U19WorldCup#U19WorldCup - Ind beats SL - Ind beats SL
#U19WorldCup - Ind beats SL

By

Published : Jan 20, 2020, 6:52 PM IST

தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று குரூப் ஏ பிரிவுக்கான போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (59), கேப்டன் ப்ரியம் கார்க் (56) ஆகியோர் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர்.

ப்ரியம் கார்க்

இதையடுத்து, ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் 52 ரன்களுடனும், சிதேஷ் வீர் 44 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 297 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அம்சி டி சில்வா, அசியன் டேனியல், தில்ஷன் மதுஷங்கா, கவிந்து நதாஷீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, 298 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 45.2 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி இப்போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் நிபுன் தனஞ்ஜெயா 50, ரவிந்து ரசந்தா 49 ரன்கள் அடித்தனர்.

ஆட்டநாயகன் விருதுடன் சிதேஷ் வீர்

இந்திய அணி சார்பில் எட்டு வீரர்கள் பந்துவீசினர். அதில் அகாஷ் சிங், சிதேஷ் வீர், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் 44 ரன்களும், இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இந்திய ஆல்ரவுண்டர் சிதேஷ் வீர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள குரூப் ஏ பிரிவுக்கான போட்டியில் இந்திய அணி ஜப்பானுடன் மோதவுள்ளது.

இதையும் படிங்க:2003இல் ராகுல் டிராவிட்... 2020இல் கேஎல் ராகுல்: கோலி சொல்லும் கணக்கு!

ABOUT THE AUTHOR

...view details