இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. இதில் நேற்று முன்தினம் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவுப் போட்டியாக, கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் நடைபெற்று வந்தது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால், வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் புஜாரா, கேப்டன் விராட் கோலி, அஜிங்கியா ரஹானே ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் புஜாரா 55 ரன்களில் வெளியேற, ரஹானே அரை சதமடித்த உடனே வெளியேறினார். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி சதம் அடித்து அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 347 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 136 ரன்களை எடுத்தார். வங்கதேச அணி சார்பில் அல் அமீன் ஹொசைன், எபதத் ஹொசைன் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.