இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்து அசத்தினர். இந்த போட்டியில் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் 91 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அரை சதமடித்த மகிழ்ச்சியில் கே.எல். ராகுல் இதன் மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 240 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 91 ரன்களையும், ரோஹித் சர்மா 71 ரன்களையும், விராட் கோலி 70 ரன்களையும் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் 7 ரன்களிலும், பிராண்டன் கிங் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மையர், பொல்லார்ட் இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் ஹெட்மையர் 41 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அரை சதமடித்த மகிழ்ச்சியில் பொல்லார்ட் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பொல்லார்ட் அரைசதமடித்து அசத்தினார். அவர் 68 ரன்கள் எடுத்திருந்தபோது புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் யாரும் சோபிக்காததால் அந்த அணி தடுமாறியது.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் தீபக் சஹார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் இந்திய அணி மூன்றாவது டி20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பாக கே.எல். ராகுல் ஆட்ட நாயகனாகவும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:400 சிக்சர்களை விளாசி ரோஹித் புதிய சாதனை!