இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், டிரினாட்டில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
இந்திய அணி அசத்தல் வெற்றி! - மேற்கிந்திய தீவுகள்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் இரண்டு ரன்களிலும், ரோகித் ஷர்மா 18 ரன்களிலும் வெளியேறிய போதிலும், அணியின் கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 279 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லோஸ் பிராத்வெயிட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். எவின் லுவிஸ் மட்டும் சிறப்பாக விளையாடி 65 ரன்களை சேர்த்தார். மற்றவர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தாத நிலையில், நிகோலஷ் பூரான் 42 ரன்களை அடித்தார். மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 46 ஒவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர், 42 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ், 210 ரன்களில் சுருண்டது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியை இந்திய அணி வென்றுள்ளது.