தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா! - Bumrah

ராஜ்கோட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

India beat Australia by 36 runs in Second ODI
India beat Australia by 36 runs in Second ODI

By

Published : Jan 17, 2020, 10:10 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபிஞ்ச், இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தவான், கோலி, ராகுல் ஆகியோரால் ஆஸ்திரேலிய அணிக்கு 341 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு வழக்கம்போல் வார்னர் - ஃபிஞ்ச் இணை தொடக்கம் கொடுத்தது.

இந்த இணை 20 ரன்கள் சேர்த்த நிலையில், ஷமி ஓவரின்போது வார்னர் அடித்த அபாரமான ஷாட்டை சரியான நேரத்தில் ஜம்ப் செய்து மனீஷ் பாண்டே கேட்ச் பிடித்தார். அது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின் ஸ்டீவ் ஸ்மித் - ஃபிஞ்ச் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

அபார கேட்ச் பிடித்த மனீஷ் பாண்டே

15 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா வீசிய பந்தில் ஃபிஞ்ச் ஸ்டம்பிங்கில் ஆட்டமிழக்க, இந்திய ரசிகர்கள் மைதானத்தில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இதையடுத்துதான் லபுசானே - ஸ்டீவ் ஸ்மித் இணை இந்திய பந்துவீச்சாளர்களை சோதனைக்குள்ளாக்கியது.

இந்த இணை பந்துகளை வீணடிக்காமல் சரியாக சிங்கிள், பவுண்டரிகள் என தொடர்ந்து அடிக்க, மீண்டும் மைதானம் மயான அமைதிக்கு சென்றது. இதனிடையே ஸ்டீவ் ஸ்மித் தனது 24ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்க்க, ஜடேஜா வீசிய பந்தை சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு லபுசானே 46 ரன்களில் வெளியேறினார். முக்கிய விக்கெட்டுகள் அனைத்தும் பெவ்லியன் திரும்பினாலும், ஸ்டீவ் ஸ்மித் மறுமுனையில் எமனாய் நின்று அதிரடியாக ரன்கள் சேர்த்து வந்தார்.

அரைசதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித்

இவருடன் அலெக்ஸ் கேரியும் சேர்ந்து அதிரடியாக ஆட, பின்னர் குல்தீப் யாதவ் வந்து தனது மாயாஜால சுழலால் கேரியை வெளியேற்றினார். பின்னர் சதம் எடுக்க 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், குல்தீப் பந்தை அடிக்க முற்பட்டு ஸ்டீவ் ஸ்மித் போல்டாக, ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்குள் வந்தது. இதையடுத்து வந்த டர்னர் - அகர் ஆகியோர் சிறிது நேரம் ஆட, டர்னரை ஷமி யார்க்கர் மூலம் வெளியேற்றினார். அவரைத்தொடர்ந்து வந்த கம்மின்ஸ் அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களுக்கு 259 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

இதையடுத்து ஸ்டார்க் 6 ரன்களிலும், அகர் 25 ரன்களிலும் 46 ஆவது ஓவரில் வெளியேற, கடைசியாக ரிச்சர்ட்சன் அதிரடியாக 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக ஷமி 3 விக்கெட்டுகளையும், சைனி, ஜடேஜா, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய வீரர் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி

இதையும் படிங்க: ஆம்லா சாதனையை துவம்சம் செய்த ரோஹித் சர்மா!

ABOUT THE AUTHOR

...view details