இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்றது.
இதில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் வங்கதேச அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் இந்திய அணியை வங்கதேசம் முதல் முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் பல்வேறு தரப்பினரும் அணியின் பீல்டிங், பந்துவீச்சு குறித்த பல விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் இன்றைய போட்டியில் இந்தியா கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.
ஏனெனில் இன்றைய போட்டியில் இந்திய அணி தோற்கும் பட்சத்தில் தொடரை இலக்கும் மோசமான நிலையில் உள்ளது. இதில் வங்கதேச அணி வெல்லும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியுடன் முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி புதிய சாதனையை அது படைக்கவுள்ளது.